உலகை ஆட்டுவிக்கும் கடல் வாணிபம்

post-featured-image

உலகை ஆட்டுவிக்கும் கடல் வாணிபம்
————————————————-
— இஜாஸ் முஸம்மில் M.Com —
————————————————-
உலக வர்த்தகத்தில் கப்பல் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. நாகரிகம் தொட்ட காலத்திலிருந்தே போக்குவரத்து இருந்துகொண்டே தான் வருகிறது. இதில் கடல் பயணம் மிகவும் குறிப்பிடத்தக்கது. சாதாரண போக்குவரத்தாக இருந்த கடல் வழிப் பயணம், காலப் போக்கில் வணிகத்திற்கும் பயன்பட ஆரம்பித்தது.

இன்று கடல்வழி வாணிபம், உலக பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று சொல்லுமளவிற்கு உருவெடுத்துள்ளது. சுமார் 90% உலக வர்த்தகம் சர்வதேச துறைமுகங்கள் மூலம் நடைபெறுகிறது. சர்வதேச அளவில் 90,000க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்கள் பலவகை வணிகச் சரக்குகளை சுமந்து கொண்டு வர்த்தகத் துணைவனாகப் பயணிக்கிறது.

2017 இல் மட்டும், ஆயிரத்து எழுபது கோடி டன் சரக்குகள் 94,169 கப்பல்கள் மூலம் பல நாடுகளில் வணிகத்திற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் ஆசியாவில் மட்டும் 41 விழுக்காடு ஏற்றுமதியும், 61 விழுக்காடு இறக்குமதியும் சர்வதேச கடல் வர்த்தகத்தில் நடைபெற்றுள்ளது.

வர்தத்கம் மற்றும் மேம்பாட்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு (UNCTAD) மதிப்பீடுகளின்படி, ஒரு ஆண்டில் (2019) உலக அளவில் நடைபெறும் கடல் வர்த்தகத் தொகையில் கிட்டத்தட்ட பாதி, மலாக்கா (MALACCA) ஜலசந்தி மற்றும் அருகிலுள்ள சுண்டா (SUNDA) மற்றும் லோம்போக் (LOMBOK) ஜலசந்தி வழியாக நடைபெற்றுள்ளது.

கடல் வணிகத்தில் 60 சதவீதத்துக்கு அதிகமான வர்த்தகம், எரிசக்தியையும் உலோக தொழிலையும் மையப்படுத்தியே நடக்கிறது. நவீன உலகத்திற்குத் தேவையான பொருட்கள், கப்பல் வழி நடைபெறும் ஏற்றுமதி இறக்குமதி மூலமே கிடைக்கிறது.

மறுபக்கம் உலக அளவில் ஏற்பட்டிருக்கும் வணிகப் போட்டி மற்றும் மக்களின் தேவை அதிகரிப்பதினாலும், விசாலமான கொள்ளளவு கொண்ட கப்பல்கள் தேவைப்படுகின்றன. தற்போது 22,000 TEU கொள்கலன்கள் கொண்ட சரக்கு கப்பல்கள் உள்ளன.

இது 10 – 15 ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்ய முடியாத ஒன்று. ஒரே காலக்கெடுவுக்குள் கொள்கலன்கள் இரட்டிப்பாகும் அளவை எட்டும் என்று யாரும் கருதவில்லை. ஆனால் நிச்சயமாக எதிர்காலங்களில் இன்னும் அதிக கொள்கலன்கள் கொண்ட சரக்கு கப்பல்கள் கட்டுவது கடல் வழி வாணிபத்திற்கு அத்தியாவசியம் என்ற சூழல் உருவாகும்.

2019 ஆம் ஆண்டு சாம்சங் ஷிப் பில்டிங் அண்ட் ஹெவி இண்ட்ரஸ்ட்ரிஸ் கோ.லிமிடெட்(SAMSUNG SHIPBUILDING & HEAVY INDUSTRIES CO. LTD) நிறுவனத்தால் கட்டப்பட்ட சரக்கு கப்பலான (Container ship) எம்.எஸ்.சி. குல்சன், உலகிலேயே மிகப் பெரிய சரக்கு கப்பல் ஆகும். இத்தாலியைச் சேர்ந்த மெடிட்டரேனியன் ஷிப்பிங் கம்பெனி (Mediterranean Shipping Company) என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த கப்பல் பாரிஸ்-ன் ஈபிள் கோபுரத்தை விட பெரியது.

இந்த சரக்கு கப்பல், 23,756 கண்டெய்னர் கொள்ளளவு திறனுடன் 400 மீட்டர் நீளமும் 62 மீட்டர் அகலமும் கொண்டது. இதன் மொத்த கொள்ளளவு திறன் 2,32,618 டன். இது தற்போது பனாமா கொடியின் கீழ் பயணம் செய்து கொண்டிருக்கிறது.

இது போன்ற பிரம்மாண்டமான கப்பல்களை கட்டுவதில் கப்பல் கட்டுமான துறையில் (Marine Eng., Naval Architecture) முனைவர் பட்டம் PhDபெறுபவர்களின் பங்கு இன்றியமையாதது. தூர்வாரல், கப்பல் ஏற்றுமதி, போக்குவரத்து, கடலில் கனிமங்களை தேடி துளையிடுதல் போன்ற கடல்சார் நடவடிக்கைகளிலும், கப்பல் துறையின் ஒழுங்கு முறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வடிவமைத்தல், கட்டமைத்தல் மற்றும் பழுதுபார்ப்பு போன்ற பிரிவுகளில் கப்பல் கட்டிடக் கலைஞர் நிபுணத்துவம் பெற்றவராக இருப்பார்.

உலகில் 71 விழுக்காடுக்கு அதிகமான கப்பல்கள் தென் கொரியாவிலும், சீனாவிலும் தான் கட்டப்படுகின்றன. தென் கொரியாவின் “பெரிய மூன்று” கப்பல் கட்டும் நிறுவனங்களான ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ்(Hyundai Heavy Industries Co., Ltd), சாம்சங் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (Samsung Heavy Industries), மற்றும் டேவூ ஷிப் பில்டிங் & மரைன் இன்ஜினியரிங் (Daewoo Shipbuilding & Marine Engineering Co.,Ltd) ஆகியவை பெரிய கொள்கலன் கப்பல்களுக்கான உலக சந்தையில் இன்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் கடல் வர்த்தகம் சராசரியாக ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் 3.4% ஆக உயரும் என்று ஐ.நா. வர்த்தக மற்றும் மேம்பாட்டு மாநாடு கூறியுள்ள இத்தருணத்தில், சொந்தமாக கப்பல் கட்டுவதில் தொடங்கி வணிகத்திற்காக பொருட்களை ஒரு நாட்டில் இருந்து மற்ற நாட்டிற்கு கொண்டு செல்வது வரை, பரந்து விரிந்துள்ள இத்துறையின் சர்வதேச சந்தையை நுட்பமாக ஆய்வு செய்து, முறையாக திட்டமிட்டு கடல் வாணிபம் சார்ந்த அறிவைக் கொண்டு செயல்பட்டால், நாமும் இந்த துறையில் கோலோச்சலாம்.

கடல் வாணிபத்தில் பாரம்பரியம் பொருந்திய தென்னிந்திய முஸ்லிம் சமூகம் மறந்துபோன தன்னுடைய பாய்மரக்கப்பல் வாணிப வரலாற்றை மீள்வாசிப்பு செய்தால் இன்றைய நவீன காலத்திற்கேற்ற அதிநவீன பிரம்மாண்டமான கப்பல்களை வடிவமைக்கலாம்.